‘புற்றுநோய்’ இந்த வார்த்தை நாம் அன்றாடம் கேட்கக் கூடிய வார்த்தைகளின் ஒன்றாக உள்ளது என்றால் அதை நாம் யாவரும் ஏற்கனவே வேண்டும்!
அதேவேளையில் இது நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் நம் வாழ்வு அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தான். இத்தகைய அபாயத்திற்கும் அஞ்ச வேண்டாம்;
காரணம் அதற்கு மருத்துவம் இருக்கிறது; தடுப்பு முறைகள் இருக்கிறன என்று விளக்குகிறார் வாய், முகம், தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வீராபாபு அவர்கள். வாருங்கள் அறிந்து கொள்வோம்.
புற்றுநோய்ச் செல்
‘புற்றுநோய்ச் செல்’ என்பது தொடர்ந்து பெருக்கமடையக் கூடிய தன்மை உடையது! எனவே ஒரே ஒரு செல் அழிக்கப்படாமல் உடலில் இருக்குமேயானால் அந்தச் செல் மீண்டும் பல செல்களாகப் பிரிகை அடையும்.
இந்த நிகழ்வானது உடலில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இளம் வயதில் நோய் எதிர்பாற்றல் அதிகமாக இருக்கும் போது நோய்ச் செல்கள் அழிக்கப்படுகிறன;
வயதாகும் போது எதிர்பாற்றல் குறைவின் காரணமாகச் செல்கள் பன்மடங்காகப் பிரிகை அடைந்து நோய்த் தாக்குதல் நடைபெறுகிறது.
READ ALSO: சிகரெட் பழக்கத்தை உடனடியாக நிறுத்தும் வழி!
வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய்
உதடுகள், ஈறு, தொண்டை, நாக்கு ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளிலும் வரக்கூடிய புற்று நோயே வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோயாகும். இந்தப் புற்றுநோய் மிகக் கொடூரமான, மிகப் பெரிய புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது!
புற்றுநோய்க்கான காரணங்கள்
இஃது ‘இதனால் தான்’ வருகிறது என்று குறிப்பிட்டுக் கூறக் குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதுமில்லை; ஆனால் தொடர்ந்து புகைத்தல், மது அருந்துதல், பாக்கு (பான் மசாலா) உபயோகித்தல், போதைப் பழக்கம் போன்ற காரணங்களால் அதிகமாக வருகிறது என்று கூறலாம்;
மேலும் இத்தகைய பழக்கம் உள்ளவர்கள் வாயை முறையாகத் தூய்மை செய்யாமல் விடும் பட்சத்தில் வாயில் ஏற்படும் அதிகப்படியான அகற்சி, வீக்கம் (Inflammation) காரணமாகவும், பூஞ்சை நோய்த் தொற்றாலும், மரபணுக் காரணமாகவும் இது வருகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
வருடத்திற்கு ஒரு முறையாவது பல் மருத்துவரிடம் ‘வாய்ப் பரிசோதனை’ செய்து கொள்ள வேண்டும். இப்பரிசோதனையில் வெள்ளை அல்லது சிவப்புப் புள்ளிகள் இருக்கிறதா?
செயற்கைப் பல் வைத்திருப்பார்களேயானால் அதில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா? நோய்த் தொற்று இருக்கிறதா? என்பதையும், பற்களின் கூர்மையால் வாயில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டு இருக்கிறதா?
பிற்காலத்தில் இந்தப் பகுதியில் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் அவர் ஆராய்வார். ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் 15 முதல் 20 நாட்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும்.
அதன் பிறகும் அறிகுறிகள் தொடர்ந்து இருக்குமேயானால் பயாப்ஸி (Biopsy) பரிசோதனைச் செய்யப்படும். இவ்வாறானப் பரிசோதனைக்கு உட்படும் பொழுதுப் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் முன்னரே புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோய் வராமலேயே முழுமையாகத் தவிர்க்கப்படும்!
இவ்வாறு செயல்படாமல் தவறும் பட்சத்தில் புற்றுநோயானது வளர்ச்சி அடையத் தொடங்கி, இந்த வளர்ச்சியின் காரணமாக நிணநீர் (Lymph) முடிச்சிகளை இந்நோய்ச் செல்கள் தாக்குகின்றன.
இந்த நிலையிலும் நாம் கவனிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் நோய்க்கான செல்கள் உடலின் மற்ற உறுப்புகளைத் தாக்கும். நிணநீர் முடிச்சுகளைத் தாக்கும் போதே கண்டறிந்தால் கூட நம்மால் முழுமையாகப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்!
READ ALSO: முதியோரைத் தாக்கும் கோடைக்கால நோய்கள்
மருத்துவம் தவிர ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு உறக்கம், உடற்பயிற்சி, பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் மூலமும் இந்தப் புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எவ்வாறெனில் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் புற்று நோய்க்கான செல்கள், இயல்பாகவே தினமும் தோன்றக்கூடிய ஒன்று தான்! ஆனால், அவ்வாறு தோன்றக்கூடிய புற்றுநோய்ச் செல்களை நமது உடலின் நோய் எதிர்பாற்றல் அழிக்க வல்லது! அந்த நோய் எதிர்பாற்றலை அளிக்கக் கூடியது மேற்கண்டக் காரணிகள்!
மேலும் கீழே குறிப்பிட்டுள்ள ‘5S’ களான கூர்மையான பல் (Sharp tooth), மது வகைகள் (Spirits), மசாலா (Spices), புகைபிடித்தல் (Smoking), சிபிலிஸ் (Syphilis) போன்றவற்றைத் தவிர்ப்பதின் மூலமும் புற்றுநோயில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.
‘மரபணு’ என்ற ஒற்றைக் காரணத்தைத் தவிரப் புற்றுநோய்க்குக் காரணமாகக் கூறப்படும் இதரக் காரணங்கள் அனைத்தையுமே நம்மால் புறக்கணிக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
ஒன்றைக் குறித்து அறியாத நிலையில் இருக்கும்போதே அதனைத் தவிர்ப்பது எப்படி என்ற யோசனையுடன் கூடிய ஐயம் நமக்குத் தோன்றும்; அறிந்த பின் அதைத் தடுப்பதற்கான, தவிர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடுவதே மதிநுட்பத்தின் வெளிப்பாடு.
எனவே, நோய்த் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகளைப் பின்பற்றி நோயற்ற வாழ்வை வாழ்வோம்! நோய் வரும் முன் நம்மைக் காத்துக் கொள்வோம்!! நோயிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்வோம்!!!