பத்ம ஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
Mandatory Savings for the Future | Padma Shri Dr.V.S.Natarajan
முதுமைக்காலத்தில் பணம் மிகமிக அவசியம். இவ்வுலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. ஆனால், பணம் இருப்பவர்களைத் தான் இவ்வுலகம் மதிக்கிறது. முதுமையில் உறவினர்கள், நண்பர்களைவிட பணம் அவசியம். அதை நம்பலாம். ஏனென்றால் பணம் பாதாளம் வரை பாயும்.
முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக அவசியம். வேகமான வாழ்க்கை முறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. ஆனால் பணம் இருப்பவர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது. அன்பான உறவினர்களும் அக்கறையான நண்பர்களும் இல்லாதவர்கள் தனிமையில் தவிப்பார்கள் எனச் சொல்லப்படுவதுண்டு. இந்த இரண்டும் முக்கியம்தான். ஆனால் முதுமையில் உறவினர்கள், நண்பர்களைவிட பணம் மிகவும் அவசியம். மற்ற எல்லாவற்றையும் விட அதை நம்பலாம்.
பென்ஷன் திட்டங்களைப் பற்றி முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக நிதி நிறுவனங்களும் வங்கிகளும் பேசுகின்றன. ‘இப்போது உங்களுக்கு மாதந்திர மருத்துவச் செலவு ஆயிரம் ரூபாய் என்றால், உங்கள் முதுமையில் அது 50 ஆயிரம் ரூபாய் ஆகிவிடும். அப்போது பணத்துக்கு என்ன செய்வீர்கள்’ என பயமுறுத்துகின்றன. வேலையில் சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே ஓய்வுக்காலத்துக்காக பணம் சேமிக்கச் சொல்கின்றன. அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டங்களைத் தாண்டி, தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்காகவும் அரசாங்கமே ஒரு பென்ஷன் திட்டத்தை நடத்துகிறது. இவை எல்லாம் மறைமுகமாக சொல்லும் ஒரு விஷயத்தை ஊன்றி கவனிக்க வேண்டும்… வயதான காலத்தில் உங்களை உங்கள் பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள். உங்களின் அப்போதைய தேவைக்கு நீங்கள்தான் இப்போதிருந்தே பணம் சேமிக்க வேண்டும்!
பணமில்லாமல் முதுமையில் பலர் வறுமையில் வாழ்கிறார்கள். கிராமத்தில் வாழும் முதியவர்களையே வறுமை அதிகமாகத் தாக்குகிறது. முதுமை, தனிமை, வறுமை மற்றும் நோய்கள் எனப் பல முதியவர்கள் நம்நாட்டில் துன்புறுகிறார்கள்.
ஒளவையார் தற்பொழுது இருந்திருந்தால் இப்படித் தான் பாடி இருப்பார்… ‘கொடிது கொடிது முதுமையில் பிணியும் வறுமையும் தனிமையும்’.
சொல்வதற்குக் கஷ்டமாக இருந்தாலும் சுடும் நிஜம் இதுதான்…
இப்போது நிறைய பேர் பணத்தை வைத்துத்தான் உறவுகளை அளவிடுகிறார்கள்.
முதுமையில், மனிதர்கள் பக்கபலமாக இருப்பதை விட, நாம் முதுமையை எதிர்நோக்கி இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே நமக்கு பக்கபலமாகும். நாம் சேமிக்கும் ஒரு பங்குத் தொகை சம்பாதிக்கும் இருமடங்கு தொகைக்குச் சமமாகும். சேமித்த பணம் கையில் இருந்தால், முதுமையில் நமக்கு உதவிட உதவியாளர்களை நியமித்து விடலாம், அல்லது, அந்தப் பணத்தை முதியோர் இல்லங்களில் கொடுத்து ஓரளவுக்கு நிம்மதியாக வாழலாம்.
பணம் கையில் இருந்தால் உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு முகம் சுளிக்காமல் நமக்கு உதவ முன் வருவார்கள். சொல்வதற்குக் கஷ்டமாக இருந்தாலும் சுடும் நிஜம் இதுதான்… இப்போது நிறைய பேர் பணத்தை வைத்துத்தான் உறவுகளை அளவிடுகிறார்கள்.
சிரமமே இல்லாமல் சேமித்து விட நிறைய எளிய வழிகள் இப்போது இருக்கின்றன. பணம் கையில் இருக்கும்போது ஒரு தைரியம், தன்னம்பிக்கை கிடைக்கும். வேறெதுவும் அதைக் கொடுப்பது இல்லை. செலவுகளைக் கட்டுப்படுத்தினால் சேமிப்பு எளிதாகிவிடும். வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள முதியவர்களுக்கு அரசாங்கம் தன்னால் இயன்ற அளவுக்கு அவர்களின் நிதிவசதியைப் பெருக்க உதவலாம்.
நடுத்தர வயதிருந்தே முதுமைக்காலத்திற்காக ஒரு கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அப்பணத்தை வேறு எதற்கும் செலவிடக் கூடாது.
ஆனால், தேவைக்குமேல் அதிகமாக சொத்துக்களை சேர்த்து, யாருக்கும் அதை உரிமையாக்காமல் வைத்திருந்தாலும் தொல்லைகள் ஏற்படும். ‘பெரியவர் எப்பொழுது இறப்பார், அந்தச் சொத்து எப்பொழுது நம் கைக்கு வரும்’ என்று எதிர்பார்க்கும் இளைய தலைமுறையினர் நிறையபேர் இருக்கிறார்கள். முதியவரின் இறப்புக்குக்கூட வருத்தம் காட்டாமல் அவருடைய சொத்துக்காகச் சண்டை போடும் இளைஞர்கள் இக்காலத்தில் பலர் உள்ளனர். ‘எப்போது இவர் இறப்பார்’ என்ற எண்ணத்தை மனத்தில் மறைத்து வைத்தபடி இருக்கும் உறவுகள் சூழ வாழ்வதைவிட வேதனை தரும் விஷயம் வேறு எதுவுமில்லை.
முதுமையில் பணம் ஓரளவுக்கு அவசியமே.
நடுத்தர வயதிருந்தே முதுமைக்காலத்திற்காக ஒரு கட்டாய சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அப்பணத்தை வேறு எதற்கும் செலவிடக் கூடாது.
முதியவர்கள் தன் சொத்துக்களை முழுமையாகத் தன் வாரிசுகளுக்குக் கொடுத்துவிடக் கூடாது. சொத்துக்கள் கைமாறியவுடன் வாரிசுகளின் மனமும் மாறிய வாழ்க்கை உதாரணங்கள் இங்கே நிறைய உண்டு. பின்பு முதியவர்கள் இருப்பது நடுத்தெரு அல்லது முதியோர் இல்லம்தான். தனக்கு என்று போதுமான அளவு வைத்துக்கொண்டுதான் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.