Homeமன நலம்வாழ்க்கை ஓர் உல்லாசப் பயணம்!

வாழ்க்கை ஓர் உல்லாசப் பயணம்!

மொழிக்கு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்றாகப் பிரித்து இலக்கணம் வகுத்தான் மனிதன். மனிதனுக்கு வாழ்க்கையை மூன்றாக வகுத்துள்ளது காலம்.

எந்தக் கவலையும் இல்லாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசி, விளையாடி காலத்தைப் போக்குவது இளமைக் காலம்.

யாரோடும் நின்று பேச நேரமில்லாமல் வேலை, வாழ்க்கை, வசதி என்று ஓடிக்கொண்டிருப்பது இடைப்பட்ட காலம்.

பேசுவதற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் தவிப்பது முதுமைக் காலம். இந்த மூன்றாவது காலத்தில் மனிதர்களிடம் மிஞ்சுவது இறந்தகாலமே.

ஏனெனில், மற்ற இரண்டு காலங்களில் தமக்காக வாழாமல் பிறரை மையப்படுத்தியே பொழுதைக் கழித்து யாருக்காகவோ ஓடி, யாருக்காகவோ பொருள் தேடி, யாருக்காகவோ மனம் வாடி, யாருக்காகவோ வருந்தி இறுதியில் யாருமின்றித் தவிப்பது வாடிக்கை.

அந்த யார் யாருக்கோ, நாம் தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள், உற்றார் உறவினர் என்று பெயர் சூட்டி அழைக்கிறோம்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இவர்கள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா என்று கோபத்தோடு கேட்கும் எதிரொலி காதைப் பிளக்கிறது.

முடியாதுதான். ஆனால், இவர்களைச் சாராமல் வாழ முடியாதா? இவர்கள் இல்லாமல் வாழ முடியாது என்னும் நிலைக்கும் இவர்களைச் சாராமல் வாழ முடியாது என்னும் நிலைக்கும் வேறுபாடு உண்டு.

வரும்போது யாரையும் உடன் அழைத்து வருவதில்லை. செல்லும் போதும் யாரையு ம் உடன் துணைக்கு அழைத்துக்கொண்டு செல்வதில்லை. அந்தப் பெரும் பயணத்திற்குத் துணை தேடும் நிலையில் மனிதர்களும் இல்லை.

துணை கிடைக்கும் வரை அந்தப் பயண ஊர்தி காத்திருப்பதும் இல்லை. பயண ஊர்தி மட்டுமல்ல; நாம் யாரை எல்லாம் உயிராக நினைத்துக் கொண்டிருந்தோமோ அவர்களும் சில மணி நேரத்திற்குப் பிறகு காத்திருப்பதில்லை.

இறுதி ஊர்வலத்தோடு முடிவுற்று அதுவரை அழுத குரல்கள் அடுத்த வேளை உணவுக்கான ஆலோசனைக் குரல்களாக மாறியிருக்கும்.

கொள்ளி வைத்த வயிறு கொள்ளும் என்று சொல்லி அள்ளி அள்ளிச் சாப்பிட ஆரம்பித்து இருப்பார்கள் பெற்ற பிள்ளைகள்.

காலம் வந்தது என்னசெய்வது என்று புலம்பலோடு காலாற நடந்து கொண்டிருப்பார்கள் அவர்களைப் பெற்றவர்கள்.

இறுதிச் சடங்குக்கான செலவு போக இறுதியாக இருக்கும் சொத்தைச் சரியாகப் பிரிக்க வேண்டுமே என்று மனத்துக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பா ர்கள் பங்காளிகள்.

எல்லாம் முடிந்ததும் இரண்டொரு வாரங்களில் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்புவார்கள். மறைந்தவரின் சுவடுகளும் மெல்ல மெல்ல மனத்திலிருந்து மறையத் தொடங்கும்.

அடுத்து வரும் நாட்களில் அமாவாசை, திவச தினம் தவிர மற்ற நாட்கள் ஒருவர் இறந்த சுவடே தெரியாமல் உறவுகளின் இயல்பு வாழ்க்கை இயல்பாகச் செல்லத் தொடங்கிவிடும்.

Click to Read: உளவியல் நிபுணர் கம்பன்!

புகைப்படத்தோடு இரங்கல் பதிவிட்டு முகநூல் நண்பர்கள் நட்புக் கணக்கை முடித்து இருப்பார்கள். அரசியல் மாறும். மகனுக்கோ, மகளுக்கோ, பேரனுக்கோ , பேத்திக்கோ திருமணம் நடக்கும்.

புதிய வரவாகக் குழந்தை பிறக்கும். திரைப்படங்கள் வரும். திருவிழாக்கள் வரும். கோடை வரும். குளிர் வரும். மழை வரும்.

எல்லாம் அதனதன் போக்கில். வீட்டைச் சுத்தம் செய்யும்போது கையில் மாட்டும் பழைய புகைப்படத்தில் மறைந்தவர் சிரிக்கும் சிரிப்பைப் பார்த்த அன்று பழைய நினைவைக் கொசுவர்த்திச் சுருள் புகை இல்லாமல் மோட்டு வளையை அண்ணாந்து பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசக்கூடும்.

ஒரு பெரிய ஆலமரத்திலிருந்து இலை ஒன்று பழுத்து உதிர்வதற்கும் மனிதன் வாழ்ந்து மறைவதற்கும் எந்த வேறுபாடுமின்றி உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டிருக்கும்.

அதுதான் இந்த உலகத்தின் சிறப்பு; பெருமை; இயல்பு. இதனை அறியாமல் ஓடும் காலத்தில் பிறருக்காக உழைத்து தள்ளாடும் காலத்தில் இறந்தகாலத்தை நினைத்து ஏங்கி, மனம் தாங்கிப் புலம்பித் திரிவதிலும் ஒரு பயனும் இல்லை.

இவ்வளவு எளிதாக மறக்கக் காத்திருக்கும் உலகில் யாரைத் திருப்திப்படுத்த எந்நாளும் இவ்வளவு பதற்றமாக ஓடிக்கொண்டிருப்பது? அவரவர் உடல், மனம் எதனையும் திருப்திப்படுத்தாமல்?

இந்த உடலையும் மனத்தையும் எப்படி திருப்திப்படுத்துவது? அதுவரை ஈட்டிய பொருளாலா? இறைமையின் அருளாலா?

“இந்தப் பிரபஞ்சத்தின் பேரருவின் முன்பு நாம் ஒர் அணு என்பதை அறியும்போது நம் தன்முனைப்பு முழுமையாக அற்றுப் போய்விடுகிறது.

நம்முடைய இறுமாப்பின் எல்லைகள் காணாமல் போய்விடும் அதிசயம் நிகழ்கிறது என்பார் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு. பணம், பொருள் தேடும் நாட்டத்தில் உடலைப் புறக்கணிக்கும்போது பெருமையாகத்தான் இருக்கும்.

அப்படி அடைகிற அனைத்துமே இழப்புகளின் காப்புக் காய்த்த தழும்புகளே. இதனை உணர்ந்து வருந்தும் காலமாக முதுமை மாறிவிடும். மனித ஆயுள் நாற்பது வயது என்றிருந்தது ஒரு காலம்.

அறுபது எட்டி எழுபது, என்பது எனத் தொடர்ந்து இப்போது நூறு வயது என்னும் சாதனையை அறிவியல் நிகழ்த்தி உள்ளது.

கைகளைக் கட்டிக் கம்பீரமாக வலம் வந்து இந்திய ஆன்மிகத்துக்கு வளம் சேர்த்த சுவாமி விவேகானந்தர் முதல், முண்டாசும் முறுக்கு மீசையுமாக கைவீசி கம்பீரமாக வலம் வந்த பாரதி வரை அனைவரும் சொன்னது ‘உடலினை உறுதி செய்’ என்பதைத்தானே?

உடலைவளர்க்கும் உபாயத்தை அறிந்து அதற்கு மதிப்பளித்துப் பேணுவது காலத்தின் கட்டாயம். இந்த மனம் இருக்கிறதே அது ஒரு வேட்டை நாய். வேட்டையாடும் தருணம் எதிர்நோக்கிப் பழைய எண்ணங்களையெல்லாம் அசைபோட்டவாறு அமைதியாகப் படுத்திருக்கும் வேட்டை நாய்.

தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி அது குத்திக் கிழிக்கும் தருணமாக முதுமையை எதிர் நோக்கியிருக்கும். அதற்கான சாத்வீகமான உணவினை இளமை முதலே சீராக வழங்கி அதனைப் பழக்கப்படுத்தி விட்டால் அது வேட்டையை மறந்து நட்போடு இருக்கப் பழகிவிடும்.

Click to Watch: பல் மருத்துவ உருட்டுகள்! உண்மை என்ன?

மனத்துக்கான சாத்வீகமான உணவு எது? மன அமைதிக்கான தியானமும் நல்ல சிந்தனையும்தாம். எண்ணங்களே இல்லாமல் இருப்பதுதான் தியானம் என்பார் ஓஷோ.

அதுதான் மனத்தின் அழுத்தத்தைக் குறைக்கும். உடல் என்னும் தேரை இயக்கும் சாரதி மனம்தான். தேரும் சாரதியும் வலிமையாக இருந்தால் முதுமையிலும் வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும்.

அதாவது… காரும் பழுதில்லாமல் இருக்க வேண்டும். ஓட்டுநரும் தள்ளாடாமல் இருக்க வேண்டும். காரும் டிரைவரும் செம்மையாக இருந்தால் கண்களை மூடியபடி மெல்லிய இசையை ரசித்துக் கொண்டே செல்லும் உல்லாசப் பயணம்தானே வாழ்க்கை!

கட்டுரையாளர்

முனைவர் ஆதிரா முல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read