ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய், தந்தை இருவரும் அக்குழந்தைக்கு தேவையான ‘அனைத்தையும் செய்கின்றனர். நாம் குழந்தையை உள்ளங்கையில் வைத்துத் தாங்கியது போல, பிள்ளைகள் எதிர்காலத்தில் நம்மைத் தாங்குவார்கள்’ என்று நம்புகின்றனர். ஆனால், பெற்றோரின் இயலாக் காலத்தில் பிள்ளைகள் அவர்களைப் பாதுகாக்காமல் இருந்து விடுகின்றனர்.
இப்படி நிராதரவாக நிற்கும் முதியோருக்கு உதவ, 2007ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. ‘இப்படி சட்டம் கொண்டுவந்துதான் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டுமா’ என்று அப்போது கேள்விகள் எழுந்தன. என்றாலும், இது காலத்தின் கட்டாயமானது.
இதன்படி, முதியோர்களைக் கைவிடும் மகன்கள், மகள்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டுமே தண்டனையாகக் கொடுக்கப்படும். 2019ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. மகன்கள், மகள்கள் மட்டுமல்லாமல், மருமகன், மருமகள் உட்பட இவர்களின் சொத்துகளில் பங்கு பெறும் யார் முதியோரை பராமரிக்காமல் கைவிட்டாலும், அவர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த மாற்றங்களால் முதியோருக்கு சாதகமா, பாதகமா?
முதியோருக்கு சாதகமே!
60 வயது தாண்டிய மூத்த குடிமக்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவதாக நம் நாடு உள்ளது. “2050ம் ஆண்டில் இந்தியாவில் ஐந்தில் ஒருவர் 60 வயது தாண்டியவராக இருப்பார்’ என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இந்நிலையில் திருமணம் ஆன பிறகு பெற்றோரைப் புறக்கணித்துவிட்டு தனிக்குடித்தனம் சென்றால், இச்சட்டம் பாயும்” என்பது ஓரளவுக்கு பெற்றோருக்குச் சாதகமே.
வயது முதிர்ந்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதை இச்சட்டத்தின் மூலம் ஒரளவு குறைக்க முடியும். சட்டத்துக்கு பயந்தே சில இளைஞர்கள் வேறு வழியின்றி தம் பெற்றோரை வீட்டில் வைத்துக் கொள்கின்றனர். செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் தானப் பத்திரத்தை ரத்து செய்ய இந்த பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டத்தில் வழி உள்ளது. துன்புறுத்தலாலோ அல்லது முன்யோசனை இல்லாமலோ வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளை மீண்டும் திரும்பப் பெறலாம் என்பதும் சாதகமான அம்சமே!
முதியோருக்கு பாதகமே!
குடும்பத்தின் கௌரவம் கருதியும், புறக்கணித்தாலும் பாசம் மாறாத நிலையிலும், தங்கள் பிள்ளைகள் மீது புகார் கொடுக்க பல முதியோர்கள் முன்வருவதில்லை. ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்ற பழமொழி உண்மைதான். பல குடும்பங்களில், பெற்றோர்கள் இப்படி புகார் செய்தால், அவர்களை அழைத்து வந்து வீட்டில் வைத்து அடைத்தும் கூட கொடுமை செய்ய நேரிடலாம்.
சட்டம் கொண்டு வரப்பட்டாலும்.. நடைமுறைக்கு வர சாத்தியம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சட்டங்கள் பற்றி விழிப்பு உணர்வும் மிகக் குறைவே! எதிர்காலத்துக்காக என்ன செய்யலாம்? இந்த சட்டம் முதியோருக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது அவரவர் குடும்பச் சூழலைப் பொறுத்தே அமையும். சட்டத்தால் சாதிக்க முடியாததை சாத்வீக முறையில் சாதிக்க முடியும்.
‘முதியோரைப் பாதுகாப்பது தங்கள் கடமை’ என்பதை இளைய சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டும். இதற்கு தகுந்த பருவம். பள்ளிப் பருவமே. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ம் தேதி உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்பு உணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளை மூலம் அரசாணை பெற்று, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இதைச் செய்யாமல், மாதா மாதம் 15ம் தேதி செய்ய வேண்டும். இவர்கள் வளரும்போது முதியோரை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்பது உறுதி.
READ ALSO: திரும்பிச் செலுத்த வேண்டாத கடன்!
முதியோர்களின் நன்மதிப்புகளைப் பற்றி பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பெரியோர்களின் நற்பண்புகளைப் பற்றியும் அவர்களை இளைய சமுதாயத்தினர் பாதுகாப்பது பற்றியும் சுவாரசியமான குறும்படங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்தப் படங்களை அரசு நடத்தும் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால், வருங்கால சமுதாயம் முதியோரை மதிப்பதாக உருவாகும். அந்தக் காலம் கனியும் வரை சற்று பொறுத்திருப்போம்!
கட்டுரையாளர்
டாக்டர் பா.அரிசங்கர்
முதியோர் நல மருத்துவர்