இந்த உலகத்திலேயே மிக மிக மலிவான ஒரு விஷயம் எது? ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் இருந்து அவர்களை வளர விடாமல் அல்லது வாழ விடாமல் தடுக்கக்கூடிய ஒரு விஷயம் எது? என்று கேட்டால் ஒரே ஒரு பதில்தான் உண்டு. அதுதான் கவலை.
எதைப் பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டிருப்பதே மனித மனம். அதிலும் மிக மிக முக்கியமான கவலை மரணத்தைப் பற்றிய கவலை. ஆனால் எவரும் மரணத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை.
நல்ல மரணமாக இருக்க வேண்டுமே, மரணம் வரை வாழ்ந்து விட்டால் எப்படி வாழ்வோம் என்று கேள்வி. மரணம் வரை நோயில்லாமல் வாழ்வோமா என்ற கேள்வி. மரணம் வரை வறுமை இல்லாமல் வாழ்வோமா என்ற கேள்வி.
மரணம் வரை நம் குழந்தைகள் நம்மை பாதுகாப்பார்களா என்ற கேள்வி. மரணம் வரை மகிழ்ச்சியாக இருப்போமா என்ற கேள்வி. இப்படியான கேள்விகளோடு இப்படியான கவலைகளோடு வாழக்கூடிய ஒரே உயிரினம் மனிதன் மட்டும் தான்.
வேறு எந்த ஐந்தறிவு, நான்கறிவு, மூன்றறிவு, இரண்டறிவு, ஓரறிவு உயிரினமும் இப்படிப்பட்ட கவலைகளைக் கொள்வதே இல்லை. ஆண்கள் அதிகமாகக் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் கையறு நிலை இருக்கும்.

பெண்களிடம் கவலை அதிகமாக இருக்கு ம் . ஆனால் சமாளித்துக் கொள்ளும் ஆளுமை இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை இந்தக் கவலை என்பது எதிர்காலப் புலனாகப் பார்க்க முடியும்.
எதிர்காலத்திற்குச் சேமித்து வையுங்கள் என்று சொல்வது ஓரளவு கவலையை வெல்வதற்குத்தான். செல்வந்தர்களிடம் இக்கவலை இல்லையா? அவர்களிடமும் இந்தக் கவலை இருக்கும். பணத்தால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம்.
இந்தக் கவலை எப்போது போகும்? எப்படி போகும்? நல்ல வேளையாக மரணத்தின் தருணத்தை இயற்கை மறைத்து வைத்து விட்டது. அதுமட்டும் தெரிந்திருந்தால் அதன் அடிப்படையில் எத்தனை அக்கிரமங்கள் நடக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
மறைந்தே ஒரு நூறு ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் பாரதியார் வாழும் காலத்தில் கொண்டாடப்படவில்லை. அன்றாடப் பிரச்சனைகளுக்கே கவலை கொள்ளும் நிலையில் இருந்தார்.
அதனால்தான், “என்னை கவலைகள் தின்ன தகாதென்று நின்னை சரணடைந்தேன்” என்று பராசக்தியை வேண்டினான். பனிரெண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு தம்மை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம்.
Click to Read: இயன்முறை மருத்துவத்தில் இவ்வளவு நன்மைகளா!!!
ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்று பார்த்து வரும்படி கூறினார். சென்ற நகுலன் ஒரு பொய்கையைப் பார்க்கிறான்.
முதலில் தன் தாகத்தைத் தணித்துக்கொண்டு சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்று எண்ணிய நகுலன் பொய்கைக்குள் இறங்குகிறான்.
அப்போது “சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளித்த பின் நீர் அருந்தவும்” என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்திய யட்சன் மயங்கி விழுந்து விடுகின்றான்.
நெடுநேரமாகியும் நகுலனைக் காணாததால் சகாதேவனை அனுப்புகின்றார் தருமர். அவனுக்கும் அப்பொய்கையில் அதே நிலைதான். அதே போல அருச்சுனன், பீமன் என்று தேடிச்சென்ற தம்பிமார்கள் நால்வரும் மயக்கமடைகின்றனர்.
இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்க சம்மதிக்கிறார். தருமரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன.

புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது? என்கிறான் யட்சன். ‘கவலை’ என்கிறார் தருமர். எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான் ? என்று யட்சன் கேட்கிறான். தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான் என்கிறார் தருமர்.
வயது கூடும் போது நோய்வரும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது. உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படவே படைக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே வயதானால் அந்த நோய் வரும், வயதானால் இந்த நோய் வரும் என்று அஞ்சி அஞ்சி கவலை நோயில் விழக்கூடாது. மிருகங்கள் எந்தக் கவலையும் கொள்வதில்லை.
மரணிக்கும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கின்றன. எந்தச் சிங்கமும், எனக்கு வயதாகிவிட்டது, இனி நீதான் சோறு போட வேண்டும் தன் குட்டிகளிடம் சண்டை போடுவதில்லை.
எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ முதுமையில் படுத்துக் கொண்டு தம் குட்டிகளிடம் கையேந்துவதில்லை.
Click to Watch: முதுமையில் கால் நரம்பு பாதிப்பது ஏன்?
மரணம் அடையும் நாள் வரை சுயமாகத் தன் வேலைகள் அனைத்தையும் தாமே செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், வயதானால்நோய் வரும், இயலாமை வரும் என்று கவலை கொண்டே நோயிலும் பாயிலும் விழுந்து விடுகின்றார்கள்.
முதுமை என்பது வயதில் இல்லை; நோய் என்பது உடலில் இல்லை; இயலாமை என்று எதுவுமில்லை, எல்லாம் மனதிலும், நம்பிக்கையிலும் தான் இருக்கிறது என்பதை முதலில் நம்ப வேண்டும்.
எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம். நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்பினால் நோயே வந்தாலும் வாழ்வேபோனாலும் அப்படித்தான் வாழ்வோம்.
“ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை” என்று கவிப்பேரரசு காத்திரமானதொரு தத்துவக் கவிதையை வடித்திருப்பார்.
பிறப்பும் இறப்பும் இடைப்பட்ட துன்பங்களும் இயல்பானது; இயற்கையானது. அஞ்சுவதாலோ, கவலை கொள்வதாலோ எந்த மாற்றம் ஏற்பட்டுவிடாது. ஆனால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தால் மரணத்தை வென்று பெருவாழ்வைப் பெற முயலலாம்.

பொதுவாக எல்லோரும் காலையில் எழுந்ததும் நாட்காட்டியின் தாளைக் கிழிப்பார்கள். உறவினர் ஒருவர் ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும்போது, “இன்றைய நாள் இனிதே முடிந்தது” என்று கூறிக்கொண்டே நாட்காட்டியின் தாளைக் கிழிப்பார். அதுதான் சரியானதும்.
ஒவ்வொரு நாளும் சிறியதும் பெரியதுமாக எதோ ஒன்றின் காரணமாகக் கவலை வரும். ஒவ்வொரு நாளும் முடிந்தவுடன் நாள்காட்டில் இருந்து ஒவ்வொரு காகிதமாகக் கிழித்து எறிவது போல அந்தந்த நாளின் கவலைகளை அந்தந்த நாளின் முடிவிலேயே கிழித்து எறிவது தான் நிம்மதியாக, நிறைவாக வாழ்வதற்கான ஒரே வழி.
கவலையை ஒதுக்குவதும் தைரியத்தை உற்ற துணைவனாகக் கைகொள்வதும் முதுமையைக் கடக்க உதவும் இருவழிச்சாலை. இது இருபாலர்க்கும் பொது.